ஓசூர்:ஓசூர் அருகே, பரந்து விரிந்து வளர்ந்துள்ள, 800 ஆண்டுகள் பழமையான ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலமரத்தை, அப்பகுதி மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே, தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையோரம் பிதிரெட்டி கிராமம் உள்ளது.
இங்கு, 4.15 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய, 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் தனியார் நிலத்தில் உள்ளது. இதில், 1,500க்கும் மேற்பட்ட விழுதுகள் உள்ளன.
இந்த மரத்தின் கீழ், கரகதம்மா கோவில் உள்ளது. பல விழுதுகளுடன் பரந்து விரிந்து நாளுக்கு நாள், மரத்தின் பரப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏராளமான பறவைகளுக்கு இந்த மரம் வாழ்விடமாக உள்ளது.
அருகிலுள்ள தனி நபர்களின் நிலத்திற்குள் ஆலமரம் விழுது விட்டு வளர்ந்தாலும், அதை கடவுளாக பார்க்கும் அக்கிராம மக்கள், மரத்தை வெட்டுவதில்லை. மேலும், மரத்தில் காய்ந்து விழும் கிளைகளை கூட, மக்கள் எடுத்து செல்வதில்லை.
மரத்தின் கீழுள்ள கரகதம்மா கோவில் திருவிழாவின்போது, குண்டம் எரிக்க இந்த மரத்தின் கிளைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சுற்று வட்டார, 14க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, ஆலமர கரகதம்மா கோவில் கிராம தேவதையாக உள்ளது.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த முருகேசன், 54, என்பவர் கூறியதாவது:
ராமச்சந்திரப்பா, சின்னபித்திகப்பா ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் தான் ஆலமரம் உள்ளது. இன்றளவும் மரத்தின் கிளைகளை வீட்டிற்கு மக்கள் எடுத்து செல்வதில்லை.
இவ்வாறு கூறினார்.