சேலம்:கறவை மாடு கடன் வழங்க தடை ஏதும் இல்லை என்பதால், தர மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மீது புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
சேலம் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா கறவைமாடு கடனை, குறைந்தபட்சம், 1.60 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, விவசாயிகள் பெறலாம்.
தனிநபர் ஜாமின்
குறைந்தபட்ச கடனுக்கு தனிநபர் ஜாமின், அதிகபட்ச கடனுக்கு சொத்து அடமானம் ஜாமின் போதும்.
விண்ணப்பித்த ஒரு வாரத்தில் கடன் கிடைக்கும். ஓராண்டுக்குள் கடனை திருப்பி செலுத்தி மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கறவைமாடு கடன் பெறலாம். அதன்படி கடந்த ஏப்., 1 முதல் தற்போது வரை, 25 ஆயிரம் விவசாயிகளுக்கு, 89 கோடி ரூபாய் கறவை மாடு கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 15 நாளாக கறவை மாடு கடனுக்கு மாற்றாக, பயிர்க்கடன் பெற்றுக்கொள்ள நிர்பந்தம் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் பயிர் ரகத்துக்கு ஏற்ப, கடன் தொகை குறைவாக இருக்கிறது. வேறு வழியின்றி அவசர தேவை கருதி, பயிர்க்கடன் பெற்று கொள்கிறோம் என தெரிவித்துஉள்ளனர்.
உத்தரவு
கறவை மாடு கடன் விண்ணப்பத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், வட்டார மேலாளர் பரிந்துரைத்தால் மட்டும் கறவைமாடு கடன் வினியோகம் இருக்கும்.
இருவரின் பரிந்துரை இல்லாததால் கறவைமாடு கடன் வழங்கல், மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கடன் இலக்கை தாண்டி, விவசாயி தேவைக்கு ஏற்ப கடன் வழங்கலாம் என, தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை உத்தரவு இருந்தும் கறவைமாடு கடன் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து சேலம் மாவட்ட விவசாய நலச்சங்க தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது:
35 கோடி ரூபாய்
ஏத்தாப்பூர் கடன் சங்கத்தில் கறவைமாடு கடன் கேட்ட விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படுகிறது. இதேநிலை மாவட்டத்தில் உள்ள, 203 கூட்டுறவு கடன் சங்கத்திலும் நீடிக்கிறது.
கறவை மாடு கடன் கேட்டு, சங்கத்துக்கு தலா, 5 மனுக்கள் வீதம், 1,000 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு கூறினார்.
மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''மாவட்டத்தில் கறவை மாடு கடன் இலக்கு, 35 கோடி ரூபாய். ஆனால், இலக்கை தாண்டி கடன் வழங்கப்பட்டுவிட்டது. இருந்தும் கடன் வழங்க எந்த தடையும் இல்லை.
''விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் கறவை மாடு கடன் உண்டு. கடன் தராத சங்கம் குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.