அரூர்:கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயந்திரம் பழுதால், 150க்கும் மேற்பட்ட வாகனங்களில் அரவைக்கு எடுத்து வரப்பட்ட கரும்புகள், வெயிலில் காய்கின்றன; விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவை கடந்த 5ல் துவங்கியது.
துவங்கிய சிறிது நேரத்திலேயே இயந்திர பழுதால், அரவை பணி பாதித்தது. இயந்திரத்தை சரிசெய்யும் பணியில் ஆலை பணியாளர்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி முடிவடைய மேலும் சில நாட்களாகும் என கூறப்படுகிறது. இதனால், கடந்த நான்கு நாட்களாக, தோட்டங்களிலிருந்து, லாரி, டிராக்டர்கள் என, 180க்கும் மேற்பட்ட வாகனங்களில் அரவைக்கு கொண்டு வந்த, 1,700 டன் கரும்புகளை இறக்க முடியாமல் காத்து கிடக்கின்றன.
அதுபோல, வெட்டப்பட்ட கரும்புகள் வயலிலும் வெயிலில் காய்ந்து வருகின்றன.
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், 'ஏற்கனவே, உரிய பருவத்தில், கரும்பு அறுவடை செய்யாததால், கரும்பு பயிர்கள் பூத்து குலுங்கின்றன. இதனால், கரும்பின் எடை குறைந்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
'ஆலையில், போதிய முன்னேற்பாடு இல்லாதது, நிர்வாக சீர்கேடு போன்றவற்றால், இப்பிரச்னை ஏற்பட்டுஉள்ளது. ஆலை துவங்கிய 30 ஆண்டுகளில் அரவை துவக்கத்தில், இதுபோல இயந்திர பழுது ஏற்பட்டது இதுவே முதல்முறை' என்றனர்.