சேலம்:தண்டவாள பாதைகளில் விலங்குகள் குறுக்கிடுவதை தவிர்க்க, ரயில்வே இன்ஜினில் உள்ள ஒலி எழுப்பானோடு, கூடுதலாக சிங்கத்தின் கர்ஜனை, புலியின் உறுமல் சத்தம் வெளிப்படுத்தும் விதமாக, புது ஒலி எழுப்பானை பொருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆடு, மாடுகள் மட்டு மின்றி வனப்பகுதிகளில் இருந்து யானை உள்ளிட்ட விலங்குகள், ரயில் தண்டவாள பாதைகளின் குறுக்கே செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, 'வந்தே பாரத்' ரயில், 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுவதால், அடிக்கடி விலங்குகள் சிக்கி இறக்கின்றன.
ரயில்வே சட்டப்படி தண்டவாளத்தில் ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதினால், 3,000 முதல், 6,000 ரூபாய் வரை, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், காட்டு விலங்குகள் குறுக்கிட்டால் என்ன செய்வதென்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் ஹரிஹரன்பாபு கூறியதாவது:
ஆடு, மாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் குறுக்கீட்டை தடுப்பு வேலிகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது.
வழக்கமாக, ரயில்வே இன்ஜினில் உள்ள ஒலி எழுப்பானோடு, கூடுதலாக வன விலங்குகளான சிங்கம், புலி உள்ளிட்டவற்றின் கர்ஜனை, உறுமல் சத்தம் வெளிப்படுத்தும் விதமாக புது ஒலி எழுப்பானை கூடுதலாக பொருத்த வேண்டும்.
விலங்குகள் தண்டவாளத்தை கடக்கும் பகுதி, வன விலங்குகள் நடமாட்டம் குறித்து, வனத்துறை சார்பில் பலகை வைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றில், இந்த ஒலி எழுப்பானை பயன்படுத்துவதன் மூலம், விலங்குகள் அச்சமடைந்து தண்டவாளத்தில் இருந்து விலகிச்செல்ல வாய்ப்புஉள்ளது.
அதன் மூலம் விபத்தும் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.