கிருஷ்ணகிரி:மத்துார் அடுத்த தொகரப்பள்ளி பஞ்சாயத்தில் காதல் திருமண ஜோடிகளிடம் 25 ஆயிரம் ரூபாய் கேட்டு, தி.மு.க., நிர்வாகி கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த தொகரப்பள்ளி பஞ்சாயத்தில், 225க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஜாதி தலைவராக பர்கூர், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் அறிஞர் உள்ளார்.
இவர் தலைமையில், கட்டப்பஞ்சாயத்து நடத்தி, காதல் திருமணங்களுக்கு அபராதம் வசூலித்து வருவதாகவும், தவணைகளாக அபராதத்தை வசூலித்து வருவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொகரப்பள்ளியில் காதல் திருமணம் செய்த 15-க்கும் மேற்பட்டோரிடம், பணம் வசூலித்து இருப்பதாக, தி.மு.க., ஒன்றிய செயலர் மீது கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, பர்கூர், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் அறிஞர் கூறுகையில், ''இளம்வயது திருமணத்தை தடுக்கும் முயற்சியில், ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சில நடவடிக்கைகளை எடுக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மீது அபாண்டமாக பழி போடுகின்றனர்,'' என்றார்.