கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே உதயநிதி ரசிகர் மன்ற துணை தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 40; வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். மேலும், உதயநிதி ரசிகர் மன்ற மாவட்ட துணை தலைவராக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, சதீஷின் மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவிஸ்ரீ ஆகியோர் வீட்டில் இருந்துஉள்ளனர்.
இரவு, 10:00 மணிக்கு ஏழு பேர் கும்பல் சதீஷ் வீட்டிற்கு முன் சத்தம் போட்டு, பெட்ரோல் குண்டுகளை வீசியது.
அதிர்ச்சியடைந்த சதீஷ் குடும்பத்தினர், கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துஉள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்குள், அக்கும்பல் அங்கிருந்து தப்பியது.
சதீஷின் வீடு முன், 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பாட்டில்கள் சிதறி கிடந்தன. அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், பெட்ரோல் குண்டுகளை வீசியது, கிருஷ்ணகிரி, அக்ரஹாரத்தை சேர்ந்த அகிலன், புதிய ஹவுசிங் போர்டைச் சேர்ந்த நித்திஷ், ஜக்கப்பன் நகரைச் சேர்ந்த மஞ்சு, சூளகிரி மோனிஷ், ராஜுவ் நகர் கார்த்திக், சதீஷ் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.