இங்குள்ள குழந்தைகள் நலவார்டு கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்துள்ளது. மழை பெய்தால் கூரை, பக்கவாட்டு சுவர்களின் வழியாக வார்டுக்குள் தண்ணீர் கசிகிறது. கூரை ஆங்காங்கே பெயர்ந்து உள்ளதால் பெண்கள் உயிரை கையில் பிடித்தபடி தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்கு சேர்க்கின்றனர்.
இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டும் வரை புதிய இடத்தில் குழந்தைகள் நல பிரிவு செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனையில் அதற்கான இடவசதி இல்லை. எனவே மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மைதானத்திலும் அதையொட்டிய அரசு இடத்தையும் சேர்த்து புதிய கட்டுமானம் கட்டப்படும் என, சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்காலிகமாக அரசு ரூ.20 கோடிக்கு முதல்கட்ட அனுமதி வழங்கியுள்ளது.
ஓராண்டாகியும் இதுவரை ஒரு செங்கலைக்கூட எடுத்து வைக்கவில்லை. மைதானத்தில் 40 சதவீதம், கலெக்டர் அலுவலகத்திற்கு சொந்தமான 60 சதவீத இடத்திற்கு ஒப்புதல் வழங்கி வருவாய் நிர்வாக கமிஷனர் ஒப்புதல் அளித்து அனுப்பப்பட்டது. அனுமதி முடிந்த நிலையில் கட்டுமான வரைபடம் தயாரித்தால்தான் எவ்வளவு தொகை என மதிப்பீடு கோரமுடியும்.
அதேபோல மகப்பேறு வார்டும் அதிக நோயாளிகளுடன் நெரிசலான இடத்தில் செயல்படுகிறது. இவ் வார்டு வாசலில் எந்நேரமும் நுாற்றுக்கணக்கானோர் காத்திருப்பதால் வாகனங்கள் செல்லமுடியவில்லை. மதுரை ஆவின் பால் பண்ணை அருகே உள்ள 2 ஏக்கர் அரசு நிலத்திற்கு மகப்பேறு பிரிவை மாற்றலாம். குழந்தைகள் நலவார்டும், மகப்பேறு பிரிவும் அருகருகே இருப்பதால் சிகிச்சை அளிப்பதும் எளிதாக இருக்கும்.
மதுரை, டிச. 10 -
மதுரை அரசு மருத்துவமனையில் இடநெருக்கடியால் நோயாளிகள் அவதிப்படும் நிலையில், மகப்பேறு, குழந்தைகள் நல வார்டு பிரிவு கட்டுமானத்திற்காக ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் உள்ளனர்.