திருப்பரங்குன்றம், -திருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி விவசாயத்தை ஊக்குவிக்க நீண்ட கால பயிர் சாகுபடி திட்டம் அல்லது மானியத்துடன் கடன் வழங்கி மாற்றுத் தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தை சுற்றி தென்பழஞ்சி, வேடர்புளியங்குளம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. அதிகளவு மழை பெய்தால் மட்டுமே கண்மாய்கள் நிரம்பும். இதன்மூலம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கண்மாய்களின் தண்ணீர் மூலம் விவசாயம் செய்பவர்கள், கண்மாய்கள் முழுமையாக நிரம்பினால் மட்டுமே ஒரு போகம் நெல் விவசாயம் செய்ய முடியும்.
இல்லையெனில் மாடுகளுக்கு சோளம் விதைக்கின்றனர். கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருப்பவர்கள் நெல், காய்கறிகள் பயிரிடுகின்றனர். பலர் நிலங்களை விற்று விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மழையை நம்பி நெல் நாற்று பாவுகின்றனர். ஆனால் மழையின்றி நாற்றுக்களை பாதி விலைக்கு விற்கின்றனர். முற்றிய நாற்றுகளை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் நஷ்டம் அடைகிறோம். கடந்தாண்டு பெய்த மழையால் ஓரளவிற்கு விவசாயம் செய்தோம். மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது முழு மானியத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க வேண்டும். குறுகிய கால பயிர்கள் பயிரிட வசதியை ஏற்படுத்த வேண்டும், என்றனர்.