சென்னை,-வங்கக்கடலில் ஐந்து நாட்களாக சுழன்று கொண்டிருந்த 'மாண்டஸ்' புயலானது நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு கடும் சூறைக்காற்றுடன் கரையை கடந்தது. கரையை கடந்த போது மணிக்கு 100 கிலோ மீட்டர்வேகத்தில் சூறாவளி காற்று வீசி சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை மிரட்டியது.
நேற்றிரவு 9:30 மணிக்கு புயல் கரை கடக்க துவங்கியது. புதுச்சேரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை கடலோர பகுதியை சூழ்ந்தவாறு புயலின் முன்பகுதியும் மையப் பகுதியும் பெரும் சூறாவளி காற்றுடன் கரையை கடக்க துவங்கியது.
சூறாவளி வேகத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. கடலோரபகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் துாக்கி வீசப்பட்டன. சென்னை நகரில் பல பகுதிகளில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
மாமல்லபுரம், கோவளம், நீலாங்கரை, மெரினா உட்பட மீனவர்கள் வசிக்கும் கடலோரப் பகுதிகளின் தாழ்வான இடங்களில் கடல் நீர் புகுந்தது. கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடல் அலைகள் 4 மீட்டர் உயரம் வரை எழும்பின.
புயலின் மையப் பகுதியானது நேற்று இரவு மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் கடற் பகுதியில் நிலை கொண்டிருந்தது. அதன் பிறகு படிப்படியாக மையப்பகுதியும்அதன் பின்பகுதியும் 12 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது.
நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்வு இன்று அதிகாலை வரை தொடர்ந்து நிகழும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்நேற்று நள்ளிரவு தெரிவித்தார்.