rசேலம்: மொடக்குப்பட்டி விவசாய பாதுகாப்பு குழு செயலர் செந்தில்குமார்: வேப்பம்புண்ணாக்கு தயாரிப்பு ஆலை எனக்கூறி கட்டுமானப்பணியை தொடங்கினர். 8 'ராட்சத' பாய்லர் வந்ததால் சந்தேகமடைந்து விசாரித்தபோது பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை என தெரிந்தது. அதேபோல் கடலுார், திரிசோழபுரத்தில், 6 ஆண்டுக்கு முன் தொடங்கிய ஆலைக்கு சென்று பார்த்தோம்.
அப்போது அந்த ஆலையால், 10 கி.மீ., நிலத்தடி நீர் பாதிப்பு, காற்று மாசுபாடு, மனிதர்கள், கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளது. செயற்கை முறை கருத்தரிப்பு செய்ய வேண்டிய நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளதாக கூறினர். இதனால், மின் இணைப்பு கொடுக்க வந்த அலுவலர்களை கண்டித்து போராட்டம் நடத்தியதால் அப்பணியை நிறுத்திவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மொடக்குப்பட்டி விவசாய பாதுகாப்பு குழு தலைவர் கணேசன்: இந்த ஆலைக்கு எதிராக, 3 முறை கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, 5 விவசாய குறைதீர் கூட்டத்தில், புகார் தெரிவித்தோம்.
ஆலை பகுதியை சுற்றி மஞ்சள், நெல் உள்ளிட்ட பயிர்கள் உள்ள நிலையில், வறண்ட நிலம் என்பதை குறிக்கும், 'டிரைலேண்ட்' என குறிப்பிட்டு, அருகில் மலைக்குன்று இருப்பதை தெரிவிக்காமல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், ஆலைக்கு தவறாக அனுமதி வழங்கியுள்ளதை குறிப்பிட்டு, கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். மனிதர்கள், விலங்கு, விளைநிலம், நீராதாரங்களை பாதிக்கும் இதுபோன்ற ஆலைகளை திறக்க, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.