சேலம்: மாணவ, மாணவியரை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை உள்பட, 3 பேர் இடமாற்றப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த மாதம், 17ல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அப்போது மாணவர்கள் கூச்சலிட்டபடி வீடியோவை கவனிக்காமல் இருந்தனர். சத்தம் போட்டது யார் என, தலைமை ஆசிரியை வசந்தகுமாரி விசாரித்தபோது, யாரும் பேசவில்லை.
இதில் ஆத்திரமடைந்த வசந்தகுமாரி, 20க்கும் மேற்பட்ட மாணவர்களை பிரம்பால் அடித்தார்.இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் விசாரித்து முதன்மை கல்வி அலுவலர் முருகனுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் எதிரொலியாக, கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வசந்தகுமாரி இடமாற்றப்பட்டார்.
அதேபோல் கொளத்துார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய கல்பனா, சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும், பதிவேடுகளை பராமரிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணைக்கு பின், அவர் நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றப்பட்டார்.
பாலியல் தொல்லை
தலைவாசல், காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த மாரிமுத்து, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்த விவகாரம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததால், பட்டதாரி தமிழ் ஆசிரியை தனலட்சுமி, செட்டிமாங்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளிக்கு இடமாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கடந்த, 7ல் பிறப்பித்துள்ளார்.