தொடர்ந்து வழிப்பறி 4 பேருக்கு 'குண்டாஸ்'
மேட்டூர்: மேட்டூர், தொட்டில்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன், 36, ஜீவா நகர் மூர்த்தி, 29, நாட்டாமங்கலம் பிரகாஷ், 30, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிவாஸ், 30, ஆகியோர், கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டதால், மேட்டூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் மீது மேட்டூர், கருமைக்கூடல் போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால், சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரைப்படி, அந்த, 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, சேலம் கலெக்டர் கார்மேகம் நேற்று உத்தரவிட்டார்.
அனுமதியற்ற கடைகளை அகற்ற மேயர் உத்தரவு
சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்படி கடைகள் வைக்கப்படுவதாக, மாநகராட்சிக்கு புகார் சென்றது. இதனால், மேயர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நடைமேடைகளில் பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும்படி, அனுமதியற்ற கடைகள் இருந்தன.
குறிப்பாக, பழம், பூ, உணவு பொருள், காலணி உள்ளிட்ட இதர பொருட்கள் அடங்கிய கடைகளை அகற்ற, கடைக்காரர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார். அதேபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினார்.
ரேஷன் கடை ஆளெடுப்பு மாற்றுத்திறனாளிக்கு உத்தரவு
சேலம்: சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடத்துக்கு நேர்முக தேர்வு வரும், 15ல் தொடங்கி, 29 வரை நடக்க உள்ளது.
அதில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர், திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம்; அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்று; தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை நேர்முக தேர்வின் போது ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என, சேலம் மண்டல கூட்டுறவு சங்க பதிவாளர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.