சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பரில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தி, கலப்படம், தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
அதில் போலி, உணவுக்கு ஒவ்வாத, கேடு விளைவிக்கக்கூடியது என கண்டுபிடித்து, சேலம், டி.ஆர்.ஓ., நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிவில் பிரிவில் பதியப்பட்ட, 79 வழக்குகளுக்கு, 5 லட்சத்து, 31 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதித்து, டி.ஆர்.ஓ., மேனகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், அதிகபட்சம் பல்வேறு வகை நொறுக்கு தீனி, தரமற்று, உடல் உபாதையை உண்டுபண்ணும் என கண்டறிந்து பதிந்த, 13 வழக்கில், 57 ஆயிரம் ரூபாய்; கலப்படம், தரமற்ற ஜவ்வரிசி தொடர்பான, 8 வழக்கில், 1 லட்சத்து, 66 ஆயிரம்; சமையலுக்கு ஒவ்வாத மசாலா தொடர்பான, 12 வழக்கில், 64 ஆயிரம்; கலப்படம், தரமற்ற வெல்லம் தொடர்பான, 8 வழக்கில், 36 ஆயிரம்; தரமற்ற சமையல் எண்ணெய் தொடர்பான, 11 வழக்கில், 75 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவை என, 79 சிவில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.