ஆத்துார்: ஆத்துார் நகராட்சியில், வீடு, ஓட்டல், தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் கழிப்பறை தொட்டிகளில் சேகரமாகும் கழிவுநீரை, நீர் நிலை உள்ளிட்ட பொது இடங்களில் விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இவற்றை தவிர்க்க, 2018 - 19ல், கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தில், 4.41 கோடி ரூபாய் மதிப்பில் தென்னங்குடிபாளையத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இப்பணி முடிந்த நிலையில், ஆத்துார் நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, அங்கு சோதனை பணியை நேற்று தொடங்கி வைத்தார். கமிஷனர் வசந்தி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து, நிர்மலாபபிதா கூறுகையில், ''இங்குள்ள, 10க்கும் மேற்பட்ட தொட்டிகளில், 40 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யலாம். அந்த தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாய பயன்பாட்டுக்கு வழங்கப்படும். அதன் கழிவை உரமாக பயன்படுத்தலாம். தற்போது சோதனை பணி தொடங்கப்பட்டுள்ளது,'' என்றார்.