ஏற்காடு:ஏற்காடில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்றனர்.
'மாண்டஸ்' புயலால், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்தது.
நேற்று மதியம் முதல் தொடர் மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் சாலை குறுக்கே மரக்கிளைகள் விழுந்து கிடந்தன. ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அண்ணா பூங்கா, படகு இல்ல சாலைகள், ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சுற்றுலா பயணியர் இல்லாமல் வெறிச்சோடின. பனிமூட்டத்தால் படகு இல்ல ஏரியில், 2 அடி துாரம் கூட தெரியவில்லை.
துடுப்பு படகு, பெடல் படகு சவாரி நிறுத்தப்பட்டு, மோட்டார் படகு சவாரி மட்டும் இயக்கப்பட்டது. மழை, குளிரை பொருட்படுத்தாமல், படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர்.
வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்றனர். பகலிலும், வாகன முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே, மலைப்பாதையில் ஊர்ந்தபடி சென்றனர்.
மேலும் ஏற்காடில் குளிர் தாக்கம் அதிகம் உள்ளதால், உள்ளூர் வாசிகள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டில் முடங்கியுள்ளனர்.