நாகர்கோவில்:''இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கும்- அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதார போட்டி வந்துவிடும் '' என கன்னியாகுமரியில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசினார்.
விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்த விவேகானந்தர் ஜெயந்திவிழாவில் மாணவர்கள் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொருளாதார போட்டி வந்துவிடும். 2047 உலகின் விஸ்வரூப நாடாக இந்தியா மாறும். யாரோ சொல்வதை படிக்காதீர்கள். நீங்கள் விரும்பியதை படியுங்கள். இலக்கை அடைய துணிவு வேண்டும்.
1995-ல் அணுகுண்டு வெடிக்க இந்தியா ஆசை பட்ட போது அமெரிக்கா மிரட்டியதால் நரசிம்மராவ் அதை கைவிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அப்துல்கலாம் மூலம் 3 அணுகுண்டை வெடித்தோம். அதன் பின்னர்தான் வாஜ்பாயிடம் துணிவும் சமயோஜிதமான புத்தியும் இருந்தது அமெரிக்காவுக்கே தெரிந்தது.
பிரதமர் மோடி 2016 நவ. 8-ல் பணமதிப்பிழப்பு விஷயத்தை சொன்னார். அதன்பிறகு டிஜிட்டல் பணவர்த்தனையில் இந்தியா உலகில் முதல் நாடாக உள்ளது.
74 பில்லியன் முறை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்திருக்கிறோம். இது மாதம் 10 லட்சம் கோடி பணபரிவர்த்தனையாகும்.விவேகானந்தரை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். அவருக்கு குரு ராமகிருஷ்ணர் இருந்ததுபோன்று நீங்களும் ஒரு குருவை கண்டுபிடியுங்கள். குரு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். குரு இல்லாமல் வாழ்வது கடலை எதிர்த்து நீச்சலடிப்பதுபோன்றது.
உங்கள் வாழ்க்கை நேராக முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், ஜோகோ கார்ப்பரேஷன் ஸ்ரீதர் வேம்பு, கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.