திருநெல்வேலி:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் வந்தே தீரும் என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருநெல்வேலி வந்த அண்ணாமலை கட்சியினர் இல்ல விழாக்களில் பங்கேற்றார்.
மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேது சமுத்திர திட்டம் குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு சரி அதன் பிறகு தி.மு.க., அரசு எதுவும் பேசவில்லை. பெயருக்கு ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அது சாத்தியமில்லை என்றதும் அதை விட்டு அடுத்த விஷயத்திற்கு சென்று விடுகிறார்கள். எந்த திட்டத்தையும் தி.மு.க., தொடர் நடவடிக்கையாக செயல்படுத்துவதில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்னும் வேட்பு மனுதாக்கல் துவங்கவில்லை. அதற்குள் தி.மு.க., வினர் படை, பரிவாரங்களுடன் பிரசாரத்தை துவங்கி விட்டனர். இதன் மூலம் தி.மு.க., வின் தோல்வி பயம் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரே, வேட்பாளர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். தொண்டர்கள் தேர்தல் பணியாற்றுவார்களா என்பதே சந்தேகம் தான். கடந்த 20 மாதங்களில் தி.மு.க., அமைச்சர்கள் சம்பாதித்த பணம் இந்த இடைத்தேர்தலில் வெளியே வரட்டும். இந்த இடைத்தேர்தலில் பா.ஜ., போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே கூட்டணி வேட்பாளராக அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் நிறுத்தப்படுவார். பா.ஜ.,விற்கான தேர்தல் 2024 லோக்சபா தேர்தல் தான்.
10 லட்சம் பேருக்கு வேலை
திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது பா.ஜ.,வின் நிலைப்பாடு. 2023 டிசம்பருக்குள் மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதில் மூன்று தவணைகளாக மத்திய அரசு 2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கடிதத்தை வழங்கியுள்ளது. டிச.31க்கு முன்பாகவே 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
அந்தமான் நிகோபார் ஒட்டியுள்ள 21 தீவுகளில் ஒன்றுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராமசாமி பரமேஸ்வரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இத்தகைய விஷயங்களை வரவேற்றிருக்க வேண்டும்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் கல் எடுத்து வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் செயல்படும் என மத்திய அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். முந்தைய திட்டத்தை விட கூடுதலாக ஆடிட்டோரியம், 150 கூடுதல் படுக்கைகளுடன் அமைக்க பிரதமர் கூறியுள்ளார். ரூ 1900 கோடி பட்ஜெட்டில் திட்டம் வர உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.