சென்னையில் கடந்தாண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து, மாநகராட்சி 2.90 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. தொடர் நடவடிக்கை எடுத்தாலும் வணிகர்கள், பொது மக்களிடையே போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மாநிலத்தில், கடந்த 2019 ஜன., 1ம் தேதி முதல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பை போன்ற பொருட்களுக்கு, அரசு தடை விதித்தது.
கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, நாடு முழுதும் மத்திய அரசு தடை விதித்தது.
இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தவும், மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் தனி குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்தினர்.
சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு ஒரு குழு அமைத்து, தீவிர சோதனை செய்யப்படுகிறது. சோதனையில் சிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனாலும் மாநிலத்தில், சட்ட விரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்தும் 'பிளாஸ்டிக்' பொருட்கள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து, பிளாஸ்டிக் சோதனை நடத்தப்படுகிறது. இதில், கடந்த ஆண்டில் மட்டும், 2.92 லட்சம் வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்து, 1.12 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் வாயிலாக, 2.90 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்தாலும், சென்னையில் உள்ள மளிகை கடைகள், இறைச்சி கடைகள் போன்றவற்றில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு, பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாதது தான், முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் தொடர்ந்து வணிக வளாகங்கள், மளிகை கடைகள் போன்றவற்றில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எத்தனை முறை அதிகாரிகள் அபராதம் விதித்தாலும், தங்களின் வணிக லாபத்திற்காக, வணிகர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துகின்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்.
தமிழக அரசு சார்பில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டாலும், அது பொதுமக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
கடும் நடவடிக்கை மற்றும் தீவிர பிரசாரம் வாயிலாக மட்டுமே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -