நாகர்கோவில்:உடல்நலக்குறைவு காரணமாக நாஞ்சில் சம்பத், 68, நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலராக நீண்ட காலம் இருந்தார்.
பின், அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கிருந்தும் வெளியேறி, தி.மு.க. ஆதரவு திராவிட இயக்க பேச்சாளராக செயல்பட்டு வந்தார். சமீபகாலமாக அவருக்கு லேசான வலிப்பு, ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன. ஜன., 23-ல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அவர், ரயிலில் மயக்கம் அடைந்தார்.
திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சுய நினைவு தப்பியுள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.