சுதந்திர போராட்ட வீரர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்பதால், திருநெல்வேலிக்கு வாழ்நாள் முழுதும் பெருமை தான்!தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் பூலித்தேவன், ஒண்டிவீரன், செங்கோட்டையில் வாஞ்சிநாதன் பிறந்தனர்.துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தனர்.
38 கலெக்டர்கள்

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோன், ஓட்டப்பிடாரம் தாலுகா கவர்ணகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தனர். தியாகிகள் பிறந்த அனைத்து ஊர்களும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தன.வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சியில் 1790ல் தான், திருநெல்வேலி உருவானது. கட்டபொம்மன் 1799 வரை ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். 1801ல் திருநெல்வேலி மாவட்டம் - ஜில்லாவாக நிர்வகிக்கப்பட்டது.திருநெல்வேலியை 1790 - 1947 ஆகஸ்ட் 14 வரை ஜாக்சன்துரை, ஆஷ்துரை உட்பட 142 ஆங்கிலேய ஆட்சியர்கள் நிர்வகித்தனர். சுதந்திரம் அடைந்த பின் 1947 ஆகஸ்ட் 15 முதல் 1986 ஆகஸ்ட் 19 வரை 38 கலெக்டர்கள் இருந்துள்ளனர்.கடந்த 1986 ஆகஸ்ட் 20ல் திருநெல்வேலியில் இருந்து துாத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டது. 2018ல் தென்காசி மாவட்டம் உருவானது.
கடந்த 1799 செப்., 5ம் தேதி, தளபதி பானர்மென் தலைமையில் ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு பீரங்கி குண்டு களால் தகர்த்தனர். அதன்பின், கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்., 9ம் தேதி கோட்டை, ஆங்கிலேயர்கள் வசமானது.அக்., 16ம் தேதி, புதுக்கோட்டையில் வைத்து, ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டார் கட்டபொம்மன். அங்கிருந்து கயத்தாறுக்கு அழைத்து வரப்பட்ட கட்டபொம்மனை அங்குள்ள புளியமரத்தில் துாக்கிலிட்டனர்.அவர் நினைவாக கயத்தாறில் நினைவிடமும், பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டையும் உள்ளது. பாளையங் கோட்டையில் கட்டபொம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதன், திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை 1911 ஜூன் 17ல் மணியாச்சி ரயில் நிலையத்தில், சுட்டுக்கொன்று, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போற்றுவோம்
மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி நாதன் நினைவாக செங்கோட்டையில் அவரது சிலை அமைக்கப்பட்டு உள்ளது.கட்டபொம்மனுக்கு முன்பே, பூலித்தேவன், வீரன் அழகுமுத்து கோன் ஆட்சி செய்து சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களிடம் போராடினர்.பூலித்தேவனுக்கு நெற்கட்டும்செவலில் மணிமண்டபம் உள்ளது. அழகுமுத்துகோனுக்கு கட்டாலங்குளத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.சுதந்திர போராட்ட வீரர்களான வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வ.உ.சி., பாரதியார் என அனைவருக்கும் நீண்ட வரலாறு உள்ளது.
திருநெல்வேலியில், வ.உ.சி.,க்கு மணி மண்டபம், பாளையங்கோட்டையில் ஒண்டி வீரனுக்கு மணி மண்டபம் உள்ளது. எட்டயபுரத்தில் பிறந்த பாரதிக்கு அங்கு நினைவு இல்லம் உள்ளது. தவிர சென்னை திருவல்லிகேணியிலும் பாரதிக்கு நினைவு இல்லம் உள்ளது.சுதந்திரத்துக்காக, ஆங்கிலேயர்களிடம் போராடி உயிர் நீத்த வீரர்கள் பூலித்தேவன், வீரன் அழகுமுத்து கோன், கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வாஞ்சிநாதன் போன்ற தியாகிகள் பிறந்த புண்ணிய பூமி திருநெல்வேலியாகும்.தியாகிகளின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தை போற்றும் வகையில், குடியரசு தினமான இன்று தியாகிகளின் நினைவை போற்றுவோம்.
- நமது நிருபர் -