ராணிப்பேட்டை:ஆற்காடில், அஞ்சலக அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய அ.தி.மு.க., நகர செயலர் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும், தற்காலிக தபால் ஊழியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி பொறியாளர் கணேசனிடம், 'டெண்டர்' தொடர்பான அஞ்சலக முத்திரையுடன் கூடிய கடிதத்தை, ஆற்காடு நகர அ.தி.மு.க., செயலர் சங்கர், 56, கடந்த, 20ல் கொடுத்தார்.
தபால் ஊழியர் கொடுக்க வேண்டிய கடிதத்தை, அ.தி.மு.க., நகர செயலர் சங்கர் கொடுத்ததால், சந்தேகமடைந்த பொறியாளர் கணேசன், ஆற்காடு தபால் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவசங்கரன் விசாரணை நடத்தியதில், ஆற்காடு தபால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக தபால் ஊழியர்கள் ஜெய்சிங், 50, பிச்சை, 51, ஆகியோர், சங்கரிடம், 2,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, அவர் கொடுத்த தபாலுக்கு பழைய தேதி அஞ்சல் முத்திரையிட்டு கொடுத்தது தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் பணிநீக்கம் செய்து, அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவசங்கரன் உத்தரவிட்டார்.
இது குறித்து, ஆற்காடு நகராட்சி பொறியாளர் கணேசன், ஆற்காடு போலீசில் புகார் செய்தார். விசாரணையில், நகராட்சியில் கால்வாய் பணிகளுக்கு பலர் டெண்டர் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
டெண்டர் தேதி கடந்த, 18ல் முடிந்து விட்டது. இதனால், அ.தி.மு.க., நகர செயலர் சங்கர், தற்காலிக தபால் ஊழியர்கள் ஜெய்சிங், பிச்சை ஆகியோர் ஒத்துழைப்புடன், டெண்டர் கடிதத்தில் பழைய தேதியிட்ட அஞ்சலக முத்திரையிட்டு, பொறியாளர் கணேசனிடம் கொடுத்தது தெரிய வந்தது.
இதற்கு, ஆற்காடு அ.தி.மு.க., பிரமுகர்கள் சேதுமாதவன், 50, ராஜேந்திரன், 54, பிச்சாண்டி, 40, ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
சங்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் ஐந்து பிரிவுகளில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.