வந்தவாசி:ஒன்பதாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு, நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மற்றும் அலோபதி சிகிச்சை அளித்து வந்த, போலி டாக்டரை, வந்தவாசி போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 48; ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, வந்தவாசி காதர் ஜண்டா தெருவில், 'ரூபாஷினி' என்ற பெயரில் கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சித்த மருத்துவம், அலோபதி சிகிச்சையளித்து வந்தார்.
புகார்படி, வந்தவாசி மருத்துவ அலுவலர் சிவப்பிரியா, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கிளினிக் சென்று திடீர் சோதனை நடத்தினார். இதில், ஆனந்தகுமார் சித்த மருத்துவம் உள்ளிட்ட எந்த மருத்துவமும் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும், ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதும் தெரியவந்தது.
கிளினிக்கில் இருந்த சித்த மருந்துகள், அலோபதி மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றி, வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, போலி டாக்டர் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.