தூத்துக்குடி:தனியார் நிலத்தின் வழியே செல்லும் மின்வயரை மாற்ற கோரிய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரை சேர்ந்தவர் பாரதி சங்கர். இவரது சகோதரி அனுஷ்யாவிற்கு சொந்தமான காலி மனையில் மின்வாரியத்தின் மின் கம்பங்கள் மற்றும் மின்வயர்கள் செல்கிறது.
அந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக பாரதிசங்கர் மின்வயர்களை அங்கிருந்து மாற்றம் செய்ய கோரி விண்ணப்பித்திருந்தார்.
அவரது மனுவை பதிவேற்றம் செய்ய மின்வாரிய இளநிலை பொறியாளர் பொன்ராஜா 57, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி, ஹெக்டர் தர்மராஜிடம் பாரதிசங்கர் புகார் செய்தார்.
நேற்று பாரதிசங்கர் தந்த ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை வாங்கிய பொன்ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.