கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடக்கிறது.
கள்ளக்குறிச்சி 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் காலி பணியிடத்தை நிரப்ப வரும் 29ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முதற்கட்ட நேர்முகத்தேர்வு நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்.,-ஏ.என்.எம்.,-டி.எம்.எல்.டி.,(பிளஸ் 2விற்கு பின் இரண்டு ஆண்டுகள் படிப்பு) அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி., உயிரியல், தாவரவியல் , பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி) படித்திருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு 15,435 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இருபாலாருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பேட்ஜ் உரிமம் எடுத்து இரண்டு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 15, 235 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
நேர்முக தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் மற்றும் நகல் கல்வித்தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம், முகவரி மற்றும் அடையாள சான்றுகளை எடுத்து வரவேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்கள் 12 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர். மேலும் விபரங்களுக்கு 91542 50864, 91542 50856 ஆகிய எண்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.