தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மூலமாக ஆய்வு நடத்தி கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை தடை குறித்து மாவட்டந்தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.
கள்ளக்குறிச்சி பகுதியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களை பல சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சாதாரண பிளாஸ்டிக் கவர்களில் அடைத்தும் விற்பனை செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அதிகாரிகளின் தொடர் ஆய்வு செய்யாததால் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகை கடைகளில் பெரும்பாலும் சாதாரண பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் அதிகாரிகள் கண்டுகொள்லாததால் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் பலர் மளிகை பொருட்கள், பழங்கள் என வழக்கம் போல் சாதாரண பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வாங்கி செல்வதை காணமுடிகிறது.
கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டபோது, மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் கவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரத்துவங்கியது. மக்காச்சோள மாவின் ஸ்டார்ச்சினை மூலப்பொருட்களாக கொண்டு 30, 40, 50 மைக்ரான் அளவுகளில் 5 கிலோ வரையிலான எடை தாங்கும் வலிவுமிக்க பிளாஸ்டிக் கவர்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்க துவங்கிவிட்டது.
இந்த பிளாஸ்டிக் கவர்கள் சில நாட்களில் மண்ணில் மக்கிப்போய், இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உள்ளன. ஆனால் சாதாரண பிளாஸ்டிக் பைகளைவிட இந்த கவர்கள் சற்றும் விலை அதிகம் என்பதால் இதன் பயன்பாடு சற்று குறைவாகவே இருந்து வருகிறது.
எனவே, கள்ளக்குறிச்சி பகுதியில் உணவு பாதுகாப்பு மற்றும் நகராட்சி அதிகாரிகள் கடுமையான சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டினை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.