கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சக்திவேல், மாநில பொருளாளர் குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்களின் கல்வி சான்றுகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகளில் முறையற்ற கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் செல்வராஜ், கல்யாணசுந்தரம், ரமேஷ். பூரிநாதன், பன்னீர்செல்வம், சதீஷ்குமார், செங்கான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.