கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.
ஏ.கே.டி., மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடந்த விழாவில், வாக்காளர் தின உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் ஏற்றுக்கொண்டனர்.
விழாவில் பள்ளிகள் மற்றும் கல்லுாரியில் நடத்தப்பட்ட முழக்கத்தொடர் எழுதுதல், கட்டுரை போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலம் சுவரொட்டி வரைதல், ஓவியப்போட்டி, பாட்டுப் போட்டி மற்றும் குழு நடன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.
மேலும் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான பணிகள் மேற்கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ்,கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, தனிவட்டாட்சியர் (தேர்தல்) பாலகுரு, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சத்தியநாராயணன்,பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.