மோகனுார், ஜன. 26-
மோகனுார் அருகே, பட்டாசு வெடித்ததில், மூன்று சிறுவர்கள், லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுாரை அடுத்த குமரிபாளையம் பஞ்.,க்கு உட்பட்ட மாமரத்துப்பட்டி காலனியை சேர்ந்தவர்கள் தனுஷ்வரன், சபரீஷ், யாசித். இவர்கள், சின்னத்தம்பிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து
வருகின்றனர்.
அப்பகுதியினர், மாமரத்துப்பட்டி காலனியில் உள்ள மீனாட்சியம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அதில், வெடிக்காத ஒரு பட்டாசு அப்பகுதியில் உள்ள குப்பையில் கிடந்துள்ளது. அதை பார்த்த மூன்று சிறுவர்களும், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, பட்டாசை எடுத்து வெடிக்க முயற்சித்தனர். உடனடியாக வெடிக்கவில்லை. அவர்கள், அருகில் சென்று பார்த்தபோது திடீரென பட்டாசு வெடித்து, மாணவர்கள் மீது தீப்பொறி விழுந்தது. இதில், லேசான காயத்துடன் அவர்கள் உயிர் தப்பினர். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சிறுவர்களின் பெற்றோர் அலறி அடித்து ஓடி வந்தனர். காயமடைந்த சிறுவர்களை நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து மோகனுார் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.