ப.வேலுார், ஜன. 26--
முட்டை விலை உயர்வால், ப.வேலுார் பகுதியில் செயல்படும் பெரும்பாலான ேஹாட்டல் நிர்வாகத்தினர், குறைந்த விலைக்கு கிடைக்கும் சேதமடைந்த முட்டைகளை வாங்கி, உணவு தயாரித்து விற்பதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, 5.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலையில், 60 காசு வரை குறைத்து வாங்கி செல்லும் வியாபாரிகள், வெளி மார்க்கெட்டில், 5.70 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
மளிகை கடைகளில் சில்லரை விற்பனையில் ஒரு முட்டை, 6 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அவ்வாறு விலை கொடுத்து வாங்கி, ஆம்லெட் உள்ளிட்ட முட்டை உணவு தயாரித்து விற்பனை செய்ய, 20 ரூபாய் விலை நிர்ணயம் செய்தால் தான் கட்டுப்படியாகும். ஆனால், ப.வேலுார் பகுதியில், 12 ரூபாய்க்கு மேல் விலை வைத்தால் யாரும் வாங்கி சாப்பிடுவதில்லை.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
லாரிகளில் முட்டைகளை ஏற்றி அனுப்பும்போது, உடைந்து போகும் முட்டைகளை தனியாக பிரித்து விற்பனை செய்கின்றனர். அந்த வகை முட்டைகள், 2 ரூபாய் முதல், 2.20 ரூபாய் வரை விற்கின்றனர். நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் பகுதியில் செயல்படும் ஹோட்டல், தாபா மற்றும் டாஸ்மாக் பார்களில் பெரும்பாலானவற்றில் உடைந்த முட்டைகளையே பயன்படுத்தி முட்டை உணவுகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
உடைந்த முட்டையை உடனடியாக பயன்படுத்த வேண்டும். நாள் கணக்கில் வைத்து அவற்றை பயன்படுத்துவதால், அவற்றை வாங்கி சாப்பிடுவோர் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். ப.வேலுார் அதன் சுற்றுவட்டார பகுதியில், உடைந்த முட்டைகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.