கரூர், ஜன. 26-
கரூரில், அ-.தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழகப்பட்டு, மேடை அமைக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் போலீசார் திடீரென அனுமதியை மறுத்ததற்கு முன்னாள் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, மனு அளித்தார்.
அதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் பொதுக் கூட்டத்துக்கு முதலில் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி கேட்கப்பட்டது. தி.மு.க., சார்பில் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே பொதுக் கூட்டம் நடக்க இருப்பதால் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அ.தி.மு.க.,வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின், கரூர் செங்குந்தபுரம், 80 அடி சாலையில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அங்கு, அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மேடை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. பேச்சாளர்கள் வருகை தந்த நிலையில், இன்று (நேற்று) மாலை 6:00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற இருந்தது. தற்போது திடீரென பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். எனவே, நாளை (இன்று) கூட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி, எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இதற்கெல்லாம் முடிவு வெகு விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, அ.தி.மு.க., வக்கீல் அணி செயலாளர் சுப்பிரமணியன், தான்தோன்றிமலை மேற்கு செயலாளர் கிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.