கரூர், ஜன. 26-
கரூர் மாவட்டத்தில், கடந்த மாதத்தில், 17 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மாணவியருக்கான 'உதிரம் உயர்த்துவோம்' திட்டம் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் எடுக்கப்பட்ட புது முயற்சியான 'உதிரம் உயர்த்துவோம்' திட்டத்தின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் உள்ள பெண் குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கக் கூடிய அனைத்து மாணவியருக்கும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
இதில், கடந்த ஒரு மாதத்தில், 17 ஆயிரம் குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரும்பு சத்து குறைபாடு, விட்டமின் பி குறைபாடு, நுண்ணுயிர் சத்து குறைபாடு போன்றவை ரத்த சோகை வர காரணமாக உள்ளது. ரத்த பரிசோதனை மூலம், ரத்தசோகை கண்டறியும் விதமாக 4 பிரிவுகளாக ஹீமோகுளோபின் அளவு ஆராயப்பட உள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் சம்பந்தப்பட்ட மாணவியருக்கு, மாத்திரை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்திலேயே மாத்திரை எடுத்துக்கொள்வதை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் தெய்வநாதன், இணை பேராசிரியர் முன்னா முகமது ஜபார், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (தொடக்க்க்கல்வி), கன்னிசாமி (இடைநிலைக்கல்வி), ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.