கரூர், ஜன. 26-
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டம் நடந்தது. இதில், 2023--24ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டார்.
அதன் பின், அவர், பேசியதாவது:
அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது, விவசாயத்தை லாபகரமான, வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல் போன்றவை விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும். நபார்டு வங்கி சார்பில், வேளாண் கட்டமைப்பு வசதிகள், இதர வேளாண் தேவைகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், ஏற்றுமதி கடன், கல்வி, வீட்டுவசதி, மரபுசாரா எரிசக்தி, சமுதாய கட்டமைப்பு கடன் வசதி என முன்னுரிமை துறைகளுக்கான கடன் 7,328.27 கோடி ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், நபார்டு வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ஜாாஜ் பாபு லாசர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன்கார்த்தி, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் சதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.