நாமக்கல், ஜன. 26-
''பாரம்பரிய மருந்து வணிகர்களை காக்கவும், சமுதாய சீரழிவை தடுக்கவும், ஆன்லைன் மருந்து வணிகத்தை, அரசு அனுமதிக்க கூடாது,'' என, மாநில பொதுச்செயலாளர் செல்வன் பேசினார்.
மருந்து வணிகர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் அரவிந்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் மனோகரன், மாநில பொருளாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர்.
பொதுச் செயலாளர் செல்வன் பேசியதாவது: தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை வழிகாட்டுதலின்படி, மனநல மருந்துகள், துாக்க மாத்திரை மற்றும் இருமல் மருந்து, வலி நிவாரணி மருந்து, கருக்கலைப்பு மாத்திரை போன்றவற்றை விற்கும்போது, மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக்கூடாது.
மருந்துகளை அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் புதிய மருந்து சீட்டுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். நோயாளியின் தொலைபேசி எண்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மருந்து சீட்டின் நகலை பெற்றுக் கொள்ள வேண்டும். முன் பின் தெரியாதவர்கள் மற்றும் மாணவர்களுக்கு, மேற்கண்ட மாத்திரைகளை விற்பனை
செய்யக்கூடாது.
பாரம்பரிய மருந்து வணிகர்களை காக்கவும், சமுதாய சீரழிவை தடுக்கவும், ஆன்லைன் மருந்து வணிகத்தை, அரசு அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதில், தலைவராக அரவிந்தன், செயலாளராக அன்பழகன், பொருளாளராக தெய்வமணி, அமைப்பு செயலாளராக பாபு உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.