குமாரபாளையம், ஜன. 26-
குமாரபாளையத்தில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக குப்பை சேகரிப்பு, வடிகால் துாய்மை பணி மாதக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில், பேசிய அனைத்து கவுன்சிலர்களும், 'தங்களது வார்டில் வடிகால் துாய்மை செய்யப்படவில்லை, குப்பை வாங்க ஆள் இல்லை. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது' என புகார் பட்டியல் வாசித்தனர்.
இதையடுத்து, அனைத்து சுகாதார மேற்பார்வையாளர்களையும் கூட்ட அரங்குக்கு வரவழைத்து, தலைவர் விஜய்கண்ணன் கண்டித்தார். தொடர்ந்து, கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:
வேல்முருகன் (சுயேச்சை): முன்னாள் அமைச்சர் தங்கமணி தொகுதி முழுதுக்கும் எம்.எல்.ஏ., ஆனால், அ.தி.மு.க., வெற்றி பெற்ற வார்டுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்கிறார். மற்ற பகுதி பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
புருஷோத்தமன் (அ.தி.மு.க.,): கடந்த கூட்டத்தில் சுகாதார பணிக்கு ஆள் பற்றாக்குறை; இந்த மாதம் சரி செய்து விடுவோம் என்றீர்கள். சரியாகி விட்டதா?
தீபா (தி.மு.க.,): தினசரி காய்கறி மார்க்கெட்டில் 89 கடைகள் மட்டுமே அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மொத்தம் 170 கடைகள் உள்ளன. மற்றவர்களுக்கு எப்படி கடைகள் தருவீர்கள். வரி, 200 ரூபாய் என உள்ளது. தினமும் நுாறு ரூபாய் சம்பாதிப்பவர் எப்படி 200 ரூபாய் வரி செலுத்துவார்.
தலைவர் விஜய்கண்ணன் : சுகாதார பணிகள் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும். குறைகள் இல்லாத வகையில் பணிகள் நடக்கும். ஆட்களை அதிகப்படுத்த நிதி ஆதாரம் இல்லை. விரைவில் சரி செய்யப்படும். 2,450 எல்.ஈ.டி., தெரு மின் விளக்குகள் அமைக்க, ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. வடிகால் பணிகள் செய்திட, 4 கோடி ரூபாய் நிதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இக்கூட்டத்தில், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ., செல்வராஜ் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.