பள்ளிபாளையம், ஜன. 26-
பள்ளிபாளையத்தில் இளம்பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ராகவ், 32, என்பவருக்கும், ஈரோட்டை சேர்ந்த அபிராமி, 30, என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் அபிராமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அபிராமியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிபாளையம் வந்தனர். அபிராமியின் தந்தை சீனிவாசன், 65, பள்ளிபாளையம் போலீசில் அளித்த புகாரில், 'என் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், அபிராமியின் கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பகல் 12:00 மணிக்கு அபிராமியின் பெற்றோர், உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷன் எதிரே பிரதான பாலத்தின் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா, அபிராமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் மகளின் சடலத்தை பெற்றுக் கொள்வோம் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அபிராமி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக அவர் பேசியுள்ளார். இதன் அடிப்படையிலும் வருவாய்த் துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.