எருமப்பட்டி, ஜன. 26--
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியன் சாதாரண கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், முறைகேடு நடப்பதாக கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.
எருமப்பட்டி யூனியன் சாதாரண கூட்டம், தலைவர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டன் முன்னிலை வகித்தார்.
இதில், யூனியன் பொது நிதியில் இருந்து பழையபாளையம் முதல் சிவநாயக்கன்பட்டி வரை தார் சாலை புதுப்பித்தல், என்.புதுப்பட்டி, பெரியார் சமத்துவபுரத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டடம் பராமரிப்பு செய்வது, வரகூர் மணிக்கவேலுார் கூட்டுறவு கடை முதல் மயானம் வரை சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
கவுன்சிலர் துரைராஜ்: கவுன்சிலர்களுக்கு கொடுக்கப்படும், தோராய மதிப்பீடு ஆங்கிலத்தில் உள்ளது. அதை, மற்றவர்களும் படிக்கும் வகையில் தமிழில் மாற்றி வழங்க வேண்டும். யூனியன் பகுதியில், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. பழையபாளையத்தில் அப்பகுதி கவுன்சிலருக்கு தெரியாமல், ஒன்றிய பொது நிதியின் கீழ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டத்துக்கு, கடந்த ஆண்டு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை.
வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டன்: தேராய மதிப்பீடு இதுவரை ஆங்கிலத்தில் தான் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இனி மாற்றி வழங்கப்படும். மாட்டுக் கொட்டகை குறித்த பயனாளிகள் பட்டியல் அனைவருக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதில், துணை தலைவர் லோகநாதன், கவுன்சிலர்கள் முத்துக்கருப்பன், முத்துகிருஷ்ணன், பூமதி, சகுந்தலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.