பல்லடம்:சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்ட கொடிகள், குடியரசு தினமான நேற்றும், அழுக்குடன் பறந்து அவமதிப்பை ஏற்படுத்தின.
நம் நாடு முழுவதும், 74வது குடியரசு தின விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நாளில், தேசிய கொடியை அவமதிக்கும் செயலையும் பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டு ஆக., 15 அன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி வைத்து, தேசபக்தியை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று, வீடு கடைகள் உள்ளிட்ட அனைத்திலும், தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.
அவ்வாறு ஏற்றப்பட்ட கொடிகளை, ஒரு சிலர் முறையாக எடுத்து வைக்காமல், அலட்சியத்துடன் அப்படியே விட்டுள்ளனர். பழைய கொடிகள், அழுக்கு படிந்தும், கிழிந்தும், வீடு, கடைகளில் பறந்தன.
குடியரசு தினமான நேற்று, தேசியக்கொடியை அவமதிக்கும் செயலாக இது பார்க்கப்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் இதுகுறித்து கண்காணித்து, பழைய கொடிகளை முறையாக அப்புறப்படுத்த எடுக்க வேண்டும்.