தேசிய பெண் குழந்தைகள் தினம்
திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவியர் அனைவரும், பெண் குழந்தைகள் சிறப்பினை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேசினர். பெண் குழந்தையை குறிக்கும் குறியீட்டு வடிவில் மைதானத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா, பள்ளியின் முதல்வர் அனிதா பங்கேற்று, பெண் குழந்தைகளின் சிறப்பு குறித்து பேசினர்.
தரமற்ற கோதுமையால் அதிருப்தி
காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில், வினியோகிக்கப்படும் கோதுமை தரமற்றதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கார்டுதாரர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அதில், துாசியாகவும், உமி மற்றும் துகள்கள் நிறைந்தும், பூச்சிகள் அரித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கோதுமையை வாங்கி செல்லும் கார்டுதாரர்கள் அதை கால்நடைகளுக்கு உணவாகவும், குப்பையில் கொட்டும் நிலையும் உள்ளது. இது குறித்து விளக்கம் பெற, காங்கயம் வட்ட வழங்கல் துணை தாசில்தார் சுந்தரமூர்த்தியைத் தொடர்பு கொண்ட போது, 'பின் தொடர்பு கொள்கிறேன்' என்று இணைப்பை துண்டித்தார்.
குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை
திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்ட, 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் வேல்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மஹராஜ், வார்டு உறுப்பினர்கள் அருண், சிவசாமி, யுவராஜ், முருகேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இலவச தென்னங்கன்று வினியோகம்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், 2022 - 23ம் ஆண்டுக்கு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், போகம்பட்டி, இடையார்பாளையம், பாப்பம்பட்டி, வடவேடம்பட்டி, ஜே.கிருஷ்ணாபுரம் மற்றும் ஜல்லிப்பட்டி வருவாய் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக தென்னங்கன்று வழங்கப்படுகிறது. இவை, ஆழியாறு அரசு தென்னை நாற்றுப்பண்ணையிலிருந்து வரவழைக்கப்பட்டது. 300 குடும்பதாரர்களுக்கு நேற்று வினியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல்களுடன் உரிய வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி தென்னங்கன்றுகள் வாங்கி பயன்பெறுமாறு சுல்தான்பேட்டை வட்டார வேளாண்மை துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
தி.மு.க., பொதுக்கூட்டம்
அவிநாசி நகர தி.மு.க., சார்பில், தி.மு.க., பொதுக்கூட்டம், மேற்கு ரத வீதியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் தலைமை வகித்தார். நகர செயலாளர் வசந்தகுமார் வரவேற்றார். வடக்கு மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, சேவூர் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அவிநாசியப்பன், பூண்டி நகராட்சி தலைவர் குமார், நகர செயலாளர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். முத்து, இளஞ்செழியன் உட்பட பலர் பேசினர். சென்னியப்பன், பெரிச்சியண்ணன், வேலாயுதம், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
வகுப்பறை கட்ட பூமி பூஜை
அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள துவக்கப்பள்ளியில், புதிய வகுப்பறை 30 லட்சம் ரூபாயிலும், கஸ்துாரிபா வீதியில் உள்ள துவக்கப்பள்ளியில், 20 லட்சம் ரூபாயிலும் புதிய வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, வார்டு கவுன்சிலர்கள் கோபால கிருஷ்ணன், பரக்கத்துல்லா, சித்ரா, சாந்தி, கவிதா, பத்மாவதி மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
'நம்ம ஸ்கூல் திட்டம்' துவக்கம்
சுல்தான்பேட்டை அருகே சடையஞ்செட்டிபாளையம் துவக்கப்பள்ளியில், குடியரசு தினவிழா நேற்று நடைபெற்றது. விழாவில், வட்டார கல்வி அலுவலர் பங்கேற்று, 'தமிழக அரசின் திட்டமான நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தை துவக்கி வைத்தார். முதல் நாளிலேயே, 21 உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இதுதவிர, புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டட திறப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.