விருதுநகர் மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் மக்களின் தேவைக்காக தாமிரபரணி, மானுார், திருப்பாசேத்தி உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
தவிர குடிநீர் ஆதாரம் உள்ள இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு, மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் பொது குழாய்களும், வீட்டிற்கு தனியாகவும் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகர் உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. திருத்தங்கல் உள்ளிட்ட சில நகரங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. பெரும்பாலான கிராம பகுதிகளிலும் இதேபோல்தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் உள்ளாட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை சிலர் மோட்டார் வைத்து மொத்தமாக உறிஞ்சி விடுகின்றனர். இதனால் அனைவருக்கும் குடிநீர் சீராக கிடைப்பதில்லை. மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதால், குழாய் இணைப்புகளில் கடைசியாக உள்ள பகுதிகளுக்கு சுத்தமாக குடிநீர் கிடைப்பதில்லை.
முன்பெல்லாம் நகர், கிராம பகுதிகளில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என தண்டோரா உள்ளிட்ட சில முறைகளின் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும்.
அதன்படி மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்களிடமிருந்து மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் தற்சமயம் அந்த நடவடிக்கை இல்லை. இன்று வரையிலும் சிலர் குடிநீரை, மோட்டாரை வைத்து உறிஞ்சி , பலரை குடிநீருக்கு தவிக்க விடுகின்றனர்.
சில மாதங்களில் கோடை காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீரின் தேவை அதிகரிக்கும். எனவே உள்ளாட்சி நிர்வாகங்கள் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.