சென்னை:அண்ணா நகர், பிடாரி மாகாளியம்மன் கோவிலின் உப கோவிலாக இருந்தது, முகப்பேர் மேற்கில் அமைந்துள்ள சந்தான ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்.
இக்கோவிலில், 13 பேர் பணியாற்றுகின்றனர். கடந்தாண்டு மே மாதம் இக்கோவில் தனி அந்தஸ்து பெற்றதால், 'கிரேட்--1' செயல் அலுவலராக, அன்புக்கரசி, 47, என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவர் பொறுப்பேற்ற பின், தன் உறவினர் உள்ளிட்ட நான்கு பேரை பணிக்கு அமர்த்தி கணக்குகளை கவனித்துள்ளார்.
இதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த புரட்டாசி மாத விழாவில், பக்தர்கள் அளித்த 12 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான தொகை கோவில் சார்பில் செலவழிக்கப்பட்டதாக கணக்கு காட்டி, பணம் கையாடல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோவில் ஊழியர்களுக்கு கடந்த நவ., மாதம் சம்பளத்தை, டிச., 26ல் வழங்கியதாக தெரிகிறது. கோவில் விழாக்காலங்களில், வெளியாட்களை வைத்து பணி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல, அன்புக்கரசி மீது பல புகார்கள் சென்றதால், அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கணக்குகளை சரிபார்க்க உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த 10ம் தேதி, சொர்ணா என்பவர் தலைமையிலான 'ஆடிட்டர்' குழு ஆய்வு நடத்தியது. இதில், உரிய கணக்கு விவரங்களை செயல் அலுவலர் வழங்கவில்லை.
மேலும், ஒரே இரவில் முழு கணக்கையும் தயாரித்து அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அறநிலையத்துறை பறக்கும் படை ஆய்வு செய்தது.
இதன் நடவடிக்கையாக, செயல் அலுவலர் அன்புக்கரசி உடனே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆய்வில், கோவில் கணக்கில் முறைகேடு நடந்தது தெரிந்ததால், அன்புக்கரசியை தற்காலிக பணி நீக்கம் செய்து, கமிஷனர் குமரகுருபரன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.