செங்குன்றம்:சென்னை - செங்குன்றம் திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு முதல், நல்லுார் ஊராட்சி சந்திப்பு வரை, திருவள்ளூர் நெடுஞ்சாலையின் இரு பக்கமும், 3 கி.மீ., துாரத்திற்கு கழிவு மண் குவிந்துள்ளது.
அதே போன்று, புழல் முதல் முதல் செங்குன்றம் புறவழிச்சாலை சந்திப்பு வரையிலான ஜி.என்.டி., சாலையின் ஓரங்களிலும் மண் குவிந்துள்ளது.
கனரக வாகன போக்குவரத்து அதிகமுள்ள, இந்த சாலைகளின் பராமரிப்பு மோசமாக உள்ளது. திருவள்ளூர் நெடுஞ்சாலை, விளக்கு வசதியின்றி இருளில் மூழ்கி கிடக்கிறது.
இந்நிலையில், அதில் பயணிக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் என்ற அச்சத்தால், தங்களின் பாதுகாப்பு கருதி, சாலையோரம் செல்கின்றனர்.
ஆனாலும், அங்குள்ள மண் குவியலில் சிக்கி, நிலை தடுமாறி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
அதே நிலை தான் புழல் முதல் செங்குன்றம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையிலும் நீடிக்கிறது. மேலும் அந்த சாலையிலும் விளக்குகள் செயல்படாமல் இருள் சூழ்ந்துள்ளது.
இது குறித்து, போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைகளின் பராமரிப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகத்திலும், புகார் செய்தனர்.
ஆனால், எந்த தரப்பிலும் மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால், தினமும் அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள், அரசு துறை அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்து உள்ளனர்.