கண்டமங்கலம்-கிருஷ்ணாபுரம், பாக்கம் பச்சைவாழி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கிருஷ்ணாபுரம், பாக்கம் கிராமத்தில் பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, மதுரை வீரன், காவமுனி, வாழ்முனி, சடாமுனி, நாதமுனி, மலையாளத்தான் சுவாமி சிலைகள்; அக்னி வீரன் மற்றும் படவேட்டம்மன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
அதையொட்டி, கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு நான்காம் கால பூஜை, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது.
காலை 10:30 மணிக்கு விநாயகர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கும், மன்னாதீஸ்வரர், பச்சைவாழி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் வேணுகோபால், பொருளாளர் விஜயரங்கம் மற்றும் கிருஷ்ணாபுரம், பாக்கம் கிராம மக்கள் செய்தனர்.