ஸ்ரீமுஷ்ணம் -ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கும், துணைத் தலைவருக்கும் தகராறு ஏற்பட்டதால், கிராம சபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஏ.வல்லியம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கசப்பாமணி; இவரது கணவர் பாலகண்ணன்.
இவருக்கும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணகுமாருக்கும், ஊராட்சியில் சில தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு, ஸ்ரீமுஷ்ணம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.
கூட்டம் ஆரம்பித்தவுடன், ஊராட்சி துணைத் தலைவர் சரவணகுமார் கிராம கணக்குகளை கேட்டதில், பாலகண்ணனுக்கும், சரவணகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.
பாதுகாப்புக்கு சென்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார், சமாதானப்படுத்தி னர். இதனால், கிராம சபைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.