மயிலம்-மயிலம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 10 சவரன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் விநாயகர் கோவில் கும்பா பிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு வந்த மயிலம் பாலய வீதி பாஸ்கர் மனைவி லட்சுமிகாந்தம், 43; அணிந்திருந்த நான்கு சவரன் செயின், கணபதி பட்டு கிராமம் மணவாளன் மனைவி மலர்விழி, 60, அணிந்திருந்த மூன்று சவரன் செயின், கொல்லியங்குணம் ஆறுமுகம் மனைவி தேவி, 41, அணிந்திருந்த மூன்று சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நகையை இழந்த பெண்கள் கூச்சலிட்டதால், கூட்டத்தில் இருந்து ஐந்து பெண்கள் நழுவ ஆரம்பித்தனர். அவர்களை மயிலம் போலீசார் நோட்டமிட்டு, மடக்கி விசாரித்தனர்.
அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், கோரிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி, 68; சங்கர் மனைவி ஜெயந்தி,58; ஆசைத்தம்பி மனைவி கஸ்துாரி,55; திருச்சி மாவட்டம், கிராப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி உமா, 62; திருவரம்பூர் துரைராஜ் மனைவி ராசாமணி, 75, என்பதும், இவர்கள், கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறித்தது தெரிய வந்தது.
இவர்கள் இது போன்று விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது தெரிய வந்தது. இது குறித்த போலீசார் வழக்குப் பதிந்து, 5 பேரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.