திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே அரசு பஸ் கண்டக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு, 50 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், விபத்தில் சிக்கியதால் போலீசில் சிக்கினர்.
திருநெல்வேலி, வி.எம்.சத்திரம் அருகே ஜான்சிராணி நகரில் வசிப்பவர் ராமசாமி, 44; அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி வனிதா; திருநெல்வேலி தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
நேற்று முன்தினம் இரவு கண்டக்டர், மகன், மகளுடன் வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல், அவர்களை தாக்கி கட்டிப் போட்டனர்.
பீரோவில் இருந்த, 50 சவரன் நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அப்போது, வேலை முடிந்து வனிதா வீட்டுக்கு வந்ததால், கொள்ளையர்கள் பின்வாசல் வழியாக தப்பினர்.
இரண்டு, 'பைக்'குகளில், ஐந்து பேர் வந்தது தெரியவந்தது. கணவர், மகன், மகள் கட்டி போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வனிதா, அவர்களது கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
பைக்குகளில் தப்பிய கொள்ளையர்கள், நள்ளிரவில் துாத்துக்குடி அருகே புதுக்கோட்டை பாலத்தில் சென்ற போது, விபத்துக்கு உள்ளாகி படுகாயம்அடைந்தனர்.
இதில், இருவர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போலீஸ் விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள், துாத்துக்குடி, கோரம்பள்ளம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த முத்து, 22, சிலுவை, 25 என, தெரியவந்தது.
ராமசாமி வீட்டில் கொள்ளையடித்தது இவர்கள் தான் எனவும் தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் உள்ளன.
இவர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட துாத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்த கண்ணன், 20, கிஷோர் டேனியல், 20 ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கொள்ளைக்கு திட்டம் தீட்டிய நாகர்கோவில் சம்சுதீனை தேடி வருகின்றனர்.