கள்ளக்குறிச்சி-இளம் வாக்காளர்கள், தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்து ஓட்டளிக்க வேண்டும் என, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் பேசினார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில் அவர், பேசியதாவது:
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் பணி தொடர்பாக சிறப்பாக பணி மேற்கொண்டமைக்காக மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கான விருதினை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தமிழ்நாடு கவர்னரிடம் பெற்றுள்ளார். இது மாவட்டத்திற்கு பெருமையாகும்.
18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து இளம் வாக்காளர்கள் தங்களுடைய பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்து தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்.
வாக்காளர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ள வேண்டும். படிவம் 6-ஏ, பயன்படுத்தி வெளிநாடு வாழ் வாக்காளர் தங்களது பெயரை சேர்த்திடலாம். படிவம் 6-பி பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
படிவம் -7, பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர்நீக்கம் செய்தலும், படிவம் -8 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் செய்யலாம். வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றிட தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.