கம்பம் -ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை விவசாயிகள் மத்தியில் பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி நடந்தது.
மண் வளம், மனித குல ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண் நடைமுறைகளை பின்பற்ற அரசு வலியுறுத்துகிறது.
இதில் நமது பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை மேம்பாட்டிற்கு பயன்படுத்தினால் நமது பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும். இதை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தவும், இதற்கென மாவட்டத்தில் ஆண்டிற்கு மூன்று கண்காட்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று ஆனைமலையன்பட்டியில் கண்காட்சி நடந்தது. இதில் பாரம்பரிய அரிசி ரகங்கள் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
நாழிப் பூவன் வாழைத் தார், செவ்வாழை சைசில் இருந்தது. பிற துறைகளில் தங்கள் துறைகளில் என்ன செய்கிறோம் என்று காட்சி படுத்தியிருந்தனர். கண்காட்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், வேளாண் இணை இயக்குனர் செந்தில்குமார், திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையா, புகையிலை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மணிவேல், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சீதாலட்சுமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராஜ், விதை சான்று துறை உதவி இயக்குனர் திலகர், வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.