கம்பம்- -செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.
கம்பத்தில் 32 காளவாசல்கள் உள்ளது. மூலப்பொருள்கள் தட்டுப்பாடு, கட்டுபடியான விலை கிடைக்காதது, தொழிலாளர் கூலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல காளவாசல்கள் மூடப்பட்டன. செங்கல் அறுப்பவர்களுக்கு ஆயிரம் கற்களுக்கு கூலி ரூ.710, அடுக்குபவர்களுக்கு கூலி ரூ.700, சீவுபவர்களுக்கு ரூ.175 கூலியாக வழங்கப்படுகிறது.
தற்போது அடுக்குபவர்கள், அறுப்பவர்களுக்கு ரூ.300 உயர்த்தி தரவும், சீவுபவர்களுக்கு ரூ.75 உயர்த்தி தரவும் வலியுறுத்தி ஜன.,14 முதல் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், செங்கல் காளவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. செங்கல் உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இரு தரப்பிருக்கும் இடையே நேற்று முன்தினம் கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
ஆனால் தொழிலாளர்களுக்கும், காளவாசல் உரிமையாளர்களுக்கும். இடையே உடன்பாடு ஏற்படவில்லை. கட்டுமான பணிகளுக்கு செங்கல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை எழுந்துள்ளது.
வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர வருவாய்த்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.