ஆண்டிபட்டி- -அறுவடை சீசன் துவங்கியதால் கால்நடைகளுக்கான தீவனங்களை சேகரித்து விவசாயிகள் இருப்பில் வைக்கின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பில் தீவனத்தேவை பூர்த்தி செய்வது முக்கியமாக உள்ளது. மழைக்காலங்களில் விவசாய நிலங்கள், மேய்ச்சல் காடுகளில் கிடைக்கும் இயற்கை தீவனம் கால்நடைகளின் தேவையை பூர்த்தி செய்யும்.
கோடை காலத்தில் இயற்கை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனை கருத்தில் கொண்ட விவசாயிகள் அறுவடை காலத்தில் கிடைக்கும் வைக்கோல், சோளத்தட்டை, பயறு வகைகளை பிரித்தெடுத்தபின் கிடைக்கும் காய்ந்த செடிகள் ஆகியவற்றை தீவனத்திற்காக இருப்பில் வைத்துக் கொள்வர். கூடுதல் தேவையானால் வெளியூர்களில் இருந்து வைக்கோல் வாங்கி லாரி மூலம் கொண்டு வந்து இருப்பில் வைத்துக் கொள்வர். தற்போது ஆண்டிபட்டி உட்பட அனைத்து பகுதிகளிலும் அறுவடை சீசன் துவங்கியதால் தீவனத்தை தேவைக்கு ஏற்ப வாங்கி இருப்பில் வைக்கின்றனர்.