சென்னை:சென்னையில் 81 சதவீதம் பேருக்கு 'வைட்டமின் - டி' குறைபாடு இருப்பதாக, 'டாடா 1எம்ஜி' ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, 'டாடா 1எம்ஜி' ஆய்வக மருத்துவ தலைவர் பிரசாந்த் நாக் கூறியதாவது:
நாடு முழுதும், 27 நகரங்களில், 'டாடா 1எம்ஜி' ஆய்வகம் சார்பில், 2.2 லட்சம் பேரிடம், வைட்டமின் - டி குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 76 சதவீதம் பேருக்கு, 'வைட்டமின் - டி' குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, 79 சதவீத ஆண்களுக்கும், 75 சதவீத பெண்களுக்கும் வைட்டமின் - டி குறைபாடு உள்ளது. மேலும், 25 வயதுக்கு உட்பட்டோரில் 84 சதவீதம் பேருக்கும், 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டோரில் 81 சதவீதம் பேருக்கும் குறைபாடு உள்ளது.
நகரங்களை ஒப்பிடுகையில் அதிகபட்சமாக குஜராத் மாநிலமான வதோதராவில் 89 சதவீதம் பேரும், சூரத்தில் 88 சதவீதம் பேரும், சென்னையில் 81 சதவீதம் பேரும் வைட்டமின் - டி குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் - டி குறைபாடால், வளர்ச்சி, வளர்சிதைவு, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு நலம், மனநலம் போன்றவை பாதிக்கப்படும்.
இதன் வாயிலாக, புரோஸ்டேட் புற்றுநோய், மன அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே, உடம்பில் சூரிய ஒளி படுவதை உறுதி செய்வதுடன், வைட்டமின் - டி நிறைந்த உணவுகளையும் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது, வைட்டமின் - டி அளவு குறித்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.